" சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு"
என்ற கவிப் பேரரசரின் வரிகளுக்கு ஏற்றாற் போல சேலை கட்டும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஏதோவொரு ஈர்ப்பு இருப்பதனை உணரத்தான் முடிகிறது.
தமிழரின் பாரம்பரிய கலாசார உடை சேலை. அதன் மவுசு எந்த நவநாகரிக உடைகளுக்கும் குறைந்ததாயில்லை. சாரிக்கு சரிநிகர் சாரிதான். எந்த பெண்ணுமே புடவையில் ரசிக்கும்படியாகத்தான் தெரிவாள். பெண்ணை பெண்மையை மகிமைப்படுத்தும் ஆடைகளில் சாரி முதன்மை பெறுகிறது.
ஒரு பெண் உருவானது,ருதுவானது, திருமணமானது, கருவானது , தாய்மையானது, மரணித்தது என ஒவ்வொரு படி நிலைகளிலும் சாரி தமிழர்களால் கௌரவப்படுத்தப்படுகிறது. அலங்காரம், திருமணம், வைபவம், வைபோகம் , திருவிழா , சடங்கு , சம்பிரதாயம் என பட்டி தொட்டியெங்கும் சாரி சம்பிரதாய உடையாய் உள்ளது. இந்துக்கள் திருமணத்தில் சாரி கூரையாய் மணவறையில் மணமகன் மணப்பெண் கரம் பிடிக்கும் மகுடமாகிறது. பெண் மரணித்த பின்னரும் சவமாய் கிடக்கையிலும் கூரைப்புடவை பிணத்திற்கும் மாண்பளிக்கிறது. கணவனை கண் கண்ட தெய்வமாய் தரிசித்திட கூரையும் ஓர் ஓடையாகிறது. பிறந்த குழந்தைக்கு தாயின் சேலை தொட்டியாய் தாய்மடிக்கு இணையாகிறது.
அப்பாவுக்கு பிறகு அதிகமாக எனக்கு புடவை வாங்கி தந்தவர் கணவர்தான் Chrishanth Selva Mariyan வகை வகையாய் வண்ணமும் நவீனமும் கலந்த தெரிவுகளுக்கு அவருக்கு இணை அவரேதான். பிறந்த நாள் பொங்கல் தீபாவளி என ஒவ்வொரு விஷேடத்தையும் சாரியை பரிசளித்து சமரசம் செய்பவள் என்னுயிர்த் தோழி கலை Kalaivany Karunanithy அம்மா வாங்கி தரும் சாரி பழசாய் போனாலும் பொக்கிமாய் என் நினைவுகளை ஏந்தும். என் பழைய அலுவலகத்தில் தொழில் புரிகையில் ஒவ்வொரு வெள்ளி , போயாவை மங்கலமாக்கிட சாரியில் கொச்சிக்கடை சிவனை சந்திப்பது என் வழமை. பெரும்பாலும் புது சாரி கோயிலுக்கு போகும் தினத்தில் உடுத்தவென ஒதுக்குவது என் வழமை. சில. சாரிகள் உணர்வுப் பிரவாகங்களின் உயிரோட்டமாய் என் நினைவை சுமந்து வாழ்கிறது.
அன்றும் இன்றும் என்றுமே புடவைக்கான மவுசு தனித்துவமானது. இருந்தும் நாகரீக வெளிக்குள் உந்துப்பட்டு சல்வார், டெனீம், டீசர்ட், சட்டை என பெண்கள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற் போல உடைகளை மாற்றி அமைத்துள்ளனர்.
ஏறத்தாழ கி.பி 3000 ம் ஆண்டளவில் சிந்துவெளி நாகரிக காலத்தில் சேலை முதன் முதலாக உடுத்தப்பட்தாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்தகைய பழமையும் தனித்துவமும் மிக்க ஆடையை அணிகின்ற பெருமையை நாம் ஒவ்வொருவரும் கொண்டுள்ளோம். 5 1/2. மீட்டர் நீளமுள்ள சாரி தற்போதைய நவீன போதையில் மீட்டர் குறைந்ததோடு அதன் கலாசார முறைமையையும் இழந்து வருகிறது. சாரி உடுத்தும் முறையினால் கவர்ச்சி உடையாகவும் மோகப் பார்வைக்கு ஏதுவான உடையாகவும் திரிபுப்படுத்தப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் சாரியும் வகை தொகையின்றி சந்தையில் மலிந்து கிடக்கிறது. கலாசார பின்னடைவை உண்டு பண்ணுவதில் சாரி உடுத்தும் நாகரீக முறைமையும் காரணமாயுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
கால தேவைக்கேற்ப சேலை கட்டுதலும் குறைவடைந்து செல்கிறது. அதிக வேலைப்பளு, தூரப்பயணம், பேரூந்து நெரிசல்கள்., சுகாதார நிலைமைகள் மற்றும் நேரச் சிக்கல்கள் காரணமாக புடவை உடுத்துவதும் சற்று சிரமம் நிறைந்ததாகவே நோக்கப்படுகிறது.
இருந்தும் சாரியின் தனித்துவம் எக்காலத்திலும் அதன் மகிமை இழப்பதாயில்லை. இழந்திட கூடாது என்பதில் நாமும் உறுதியாய் இருப்போம்.
கவிதாயினி நல்லையா ஜீவஜோதி