திங்கள், 3 ஜூன், 2024

 உணவுப் பொட்டலத்தில் சமையல் கை வண்ணத்தை கட்டி அனுப்பலாம்.இருந்தும் ஒரு பெண் உணர்வுகளை உணவோடு கட்டி அனுப்பும் கதை தான் the lunch box படம்.


Ritesh Batra, Irfan Khan, Nirmrat Kaur மற்றும் Nawazuddin  Siddiqui  போன்றோரின் நடிப்பில் வெளியான படம்.பெண்மையின் ஏக்கங்களையும் எதிர்பார்ப்புக்களையும் அவளது மன விலாசங்களையும் ஏமாற்றமின்றி  எழுதி தந்திருக்கிறார் தயாரிப்பாளர்.


இப்பிடியும் lunch box விலாசம் தேடக்கூடுமா என பார்ப்பவர்களை சிந்திக்க வைக்கிறது.கணவனுக்கு அனுப்பும்  lunch box வேறு ஒருவருக்கு போகிறது என்பதை உணர்கிறாள் மனையாள்.ஆனாலும் அதை கண்டு கொள்ளாத கணவன் ஒரு தடவையேனும் lunch box பற்றி விசாரிக்காதிருப்பதும் விசித்திரம்தான்.தனியாக வாழும் பட கதாநாயகனுக்கு போகிறது lunch box.  குரல் மட்டும் வந்து போகும் மேல்மாடி பாட்டியின் அறிவுரை அலட்டல் இல்லாமல் நகர்த்துகிறது கதையை. 

இப்படியும் அப்படியுமாக கடைசியில் கடிதங்கள் முகவரி தேட  விளைகின்றன. நட்பை உணர்வை சமையலுக்குள் lunch box தூக்கிச் செல்கிறது. சப்பாத்தி தொட்டுக் கொள்ள பலவகை கறியோடு பார்வையாளர்கள் கவனம் சிதறாமல் கதையை கொண்டு சென்ற விதம் அருமை. 


குடும்பம், நட்பு, காதல், கல்யாணம் எல்லாவற்றையும் ஒன்றாய் தந்திருக்கிறது the lunch box.

 2013.05.19 cannes flim festival ல் பரிமாறி 2013.09.20 இந்தியாவில் சுவை கூட்டியுள்ளது.பார்க்கலாம் பசியாறலாம் அப்படியே சிந்தனை பசி ஏற்படுவதையும் தவிர்க்க முடியாதுள்ளது. The lunch box   is a letter box .The lunch box  உணர்வின் சுவை.

 " சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு"

என்ற கவிப் பேரரசரின் வரிகளுக்கு ஏற்றாற் போல சேலை கட்டும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஏதோவொரு ஈர்ப்பு இருப்பதனை உணரத்தான் முடிகிறது. 


தமிழரின் பாரம்பரிய கலாசார உடை சேலை. அதன் மவுசு எந்த நவநாகரிக உடைகளுக்கும் குறைந்ததாயில்லை.   சாரிக்கு சரிநிகர் சாரிதான். எந்த பெண்ணுமே புடவையில் ரசிக்கும்படியாகத்தான் தெரிவாள். பெண்ணை பெண்மையை மகிமைப்படுத்தும் ஆடைகளில் சாரி முதன்மை பெறுகிறது. 


ஒரு பெண் உருவானது,ருதுவானது, திருமணமானது, கருவானது , தாய்மையானது, மரணித்தது என ஒவ்வொரு படி நிலைகளிலும் சாரி தமிழர்களால் கௌரவப்படுத்தப்படுகிறது. அலங்காரம், திருமணம், வைபவம், வைபோகம் , திருவிழா , சடங்கு , சம்பிரதாயம் என பட்டி தொட்டியெங்கும் சாரி சம்பிரதாய உடையாய் உள்ளது. இந்துக்கள் திருமணத்தில்  சாரி கூரையாய்  மணவறையில் மணமகன் மணப்பெண் கரம் பிடிக்கும் மகுடமாகிறது.   பெண் மரணித்த பின்னரும் சவமாய் கிடக்கையிலும் கூரைப்புடவை பிணத்திற்கும் மாண்பளிக்கிறது.  கணவனை கண் கண்ட தெய்வமாய் தரிசித்திட கூரையும் ஓர் ஓடையாகிறது. பிறந்த குழந்தைக்கு  தாயின் சேலை தொட்டியாய் தாய்மடிக்கு இணையாகிறது. 


அப்பாவுக்கு பிறகு அதிகமாக எனக்கு புடவை வாங்கி தந்தவர் கணவர்தான் Chrishanth Selva Mariyan வகை வகையாய் வண்ணமும் நவீனமும் கலந்த தெரிவுகளுக்கு அவருக்கு இணை அவரேதான். பிறந்த நாள் பொங்கல் தீபாவளி என ஒவ்வொரு விஷேடத்தையும் சாரியை பரிசளித்து சமரசம் செய்பவள் என்னுயிர்த் தோழி கலை Kalaivany Karunanithy  அம்மா வாங்கி தரும் சாரி பழசாய் போனாலும் பொக்கிமாய் என் நினைவுகளை ஏந்தும்.  என் பழைய அலுவலகத்தில் தொழில் புரிகையில் ஒவ்வொரு வெள்ளி , போயாவை மங்கலமாக்கிட சாரியில் கொச்சிக்கடை சிவனை சந்திப்பது என் வழமை.  பெரும்பாலும் புது சாரி கோயிலுக்கு போகும் தினத்தில் உடுத்தவென ஒதுக்குவது என் வழமை. சில. சாரிகள் உணர்வுப் பிரவாகங்களின் உயிரோட்டமாய்  என் நினைவை சுமந்து வாழ்கிறது. 


அன்றும் இன்றும் என்றுமே புடவைக்கான மவுசு தனித்துவமானது. இருந்தும் நாகரீக வெளிக்குள் உந்துப்பட்டு சல்வார், டெனீம், டீசர்ட், சட்டை என பெண்கள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற் போல உடைகளை மாற்றி அமைத்துள்ளனர். 


ஏறத்தாழ கி.பி 3000 ம் ஆண்டளவில் சிந்துவெளி நாகரிக காலத்தில் சேலை முதன் முதலாக உடுத்தப்பட்தாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்தகைய பழமையும் தனித்துவமும் மிக்க ஆடையை அணிகின்ற பெருமையை நாம் ஒவ்வொருவரும் கொண்டுள்ளோம். 5 1/2. மீட்டர் நீளமுள்ள சாரி தற்போதைய நவீன போதையில் மீட்டர் குறைந்ததோடு  அதன் கலாசார முறைமையையும் இழந்து வருகிறது. சாரி உடுத்தும் முறையினால் கவர்ச்சி உடையாகவும் மோகப் பார்வைக்கு ஏதுவான உடையாகவும் திரிபுப்படுத்தப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் சாரியும் வகை தொகையின்றி சந்தையில் மலிந்து கிடக்கிறது.  கலாசார பின்னடைவை உண்டு பண்ணுவதில் சாரி உடுத்தும் நாகரீக முறைமையும் காரணமாயுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. 


கால தேவைக்கேற்ப சேலை கட்டுதலும் குறைவடைந்து செல்கிறது. அதிக வேலைப்பளு, தூரப்பயணம்,  பேரூந்து நெரிசல்கள்., சுகாதார நிலைமைகள் மற்றும் நேரச் சிக்கல்கள் காரணமாக புடவை உடுத்துவதும் சற்று சிரமம் நிறைந்ததாகவே நோக்கப்படுகிறது. 


இருந்தும் சாரியின் தனித்துவம் எக்காலத்திலும் அதன் மகிமை இழப்பதாயில்லை. இழந்திட கூடாது என்பதில் நாமும் உறுதியாய் இருப்போம். 


கவிதாயினி நல்லையா ஜீவஜோதி

ஞாயிறு, 2 ஜூன், 2024

 உலகப் பெற்றோர் தினம் (Global Parents' Day) என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 1 ஆம் நாள் அன்று பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.



ஒரு பெற்றோர் தனது வாழ்நாளில் செய்கின்ற குழந்தைகளுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தல், கடமைகளை புரிதல் மற்றும் இன்னோரன்ன அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தினை நன்றி பகரும் முகமாக இத்தினம் அனுஷ்ட்டிக்கப்படுகிறது.


 

உலக பெற்றோர் தின இந்தாண்டின் கருப்பொருள், விளையாட்டுத்தன பெற்றோரின் வாக்குறுதி என்பதாகும். ஜூன் முழுவதும் UNICEF எனப்படும் ஐநாவின் குழந்தைகள் நிதியம்  பெற்றோர்களுக்கு ஆதரவு தருவது மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் அறிவியல் அடித்தளத்தை அமைக்கும், விளையாட்டுகளில் பங்கெடுக்கும் வகையில், செய்யப்படும். இதுதொடர்பாக ஆன்லைன் விளையாட்டுக்களும் வடிவமைக்கப்பட்டு, பெற்றோர்களும், குழந்தைகளும் விளையாடும் வகையில், அவர்களுக்கு பாதுகாப்பான சூழல் மற்றும் நேர்மறையான சூழலை உருவாக்குவதும் இதன் நோக்கம். 



“தாயில் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்று பாடியருளினார் ஒளவையார்.  அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம், மாதா பிதா குரு தெய்வம் என்று கூறும் அனைத்து நூல்களிலும் பெற்றோரின் மாண்பும் பெருமையும் வலியுறுத்தப்படுகின்றன.


இத்தகைய மாண்பு மிகு பெற்றோர்களினன் பிள்ளை என்ற வகையில் நானும்  பெருமிதம் கொள்கிறேன்.  தந்தை நல்லையா பேரைப் போலவே நல் உள்ளம் கொண்டவர் . தாய் பூமணி பூவிலும் மென்மை படைத்த மேன்மையானவர். தந்தை ஏறத்தாழ தனது தந்தை இறந்த பிறகு தன் 16 வது வயதில் தொழிலுக்கு செல்லத் தொடங்கியவர்  இன்று வரை தொழிலை செய்துகொண்டுதான் இருக்கிறார். எங்கள் நால்வரின் கல்விக்காக. எலும்புத் தேய பாடுபட்டவர். தந்தைக்கு இணையாய் என் அன்னையும் தேயிலைத் தோட்டத்தில் மழை வெயில் பாராது அரும் பாடுபட்டவர். 


இன்றைய காலத்தில் 1700 ரூபா சம்பளத்திற்காக நீதிமன்றம் செல்லும் கூட்டுக் கம்பனிகள் அன்று எம் பெற்றோருக்கு நாளாந்தம் 100-145 ரூபா சம்பளத்தையே வழங்கியிருந்தது. இதில் பேரு, கிலோ , நேரம் அது இதுனு சாட்டை சொல்லி உழைப்பை அட்டைக்கு இணையாய் உறிஞ்சி மேய்ந்தது முதலாளி வர்க்கம். எது எப்படியான போதும் எம் கல்விக்கு,உணவுக்கு எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை எனை பெற்றவர்கள். நேர்மை , திருடாமை,  பொய் சொல்லாமை, திறமை, உழைப்பு,ஏமாற்றாமை, நேர முகாமைத்துவம் போன்ற அனைத்து சான்றாண்மை பண்புகளையும் எஎனக்கு கற்றுத் தந்தவர் எம் பெற்றோரே. 


என் பெற்றோர் எத்தனையோ நபர்களின் வாழ்வுக்கு விடிவெள்ளியாய் அமைந்துள்ளனர்.எத்தனையோ பேர்களின் இல்லற வாழ்விற்கு ஏணிப்படியாய் அமைந்துள்ளனர். என் பெற்றோர்களை என் வாழ்வின் அச்சாணியாக எண்ணுகிறேன். அவர்களோடு இணைந்து வாழும் வேறின்றி அவர்களை என்றும் எப்போதுமே என் மானசீக குருவாக எண்ணுகிறேன். பெரும்பாலும் தம் பிள்ளைகளுக்கு  மாத்திரமே பெற்றோர்களாக இருப்பார்கள். ஆனால் எனை ஈன்றவர்கள் அறிந்தவர்கள் யாவர்க்குமே நல் பெற்றோராகவே நடக்கின்றனர். இத்தகைய சிறப்பம்சம் நான் எந்தன்பெற்றோரிடத்தில் மாத்திரமே காண்கிறேன். 


நான் பெற்றோர் வழி கற்பினும் என் வழி வாழ்வு அமைத்தாலும் பெற்றோரின் ஆசி பெற்றவர்.அவர்கள் வழியில் என் குழந்தைக்கும் வழிகாட்டிட முயல்கிறேன்.




என் வாழ்வில் எப்படி ஒரு பெற்றோர் இருக்கக் கூடாது என்பதற்கு நிறையவே பெற்றோர்ளை சந்தித்துள்ளேன். அந்த வகையில் எனை பெற்றவர்கள் போலவே எனது தந்தையின் தங்கை (மாமி) தனது முயற்சியினால் தமது மூன்று பிள்ளைகளையும் கற்பித்து நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளார். தனது  தேயிலைத் தோட்டத் தொழில் வருமானத்திலே தன் கணவன் பிள்ளைகள் மூவரையும் கவனித்து வந்தவர். தம் மூன்று பிள்ளைகளின் கல்விக்காய் என் தந்தையின் வழி பின்பற்றி உழைப்பால் தேய்ந்தவர். அவர்ள் மூவரும் நல்ல வழியில் பயணிக்க வழிகாட்டியுள்ளார்.


எனவே இத்தகைய தெய்வத்தின் மேன்மை கொண்ட. பெற்றோர்களை பெற்ற நாம் உண்மையிலே பேறுபெற்றவர்கள் தான். 

நாமும் எம் பிள்ளைச் செல்வங்களுக்கு இவர்களை உதாரணமாகக் கொண்டு வாழ்வோம்.