உலகப் பெற்றோர் தினம் (Global Parents' Day) என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 1 ஆம் நாள் அன்று பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பெற்றோர் தனது வாழ்நாளில் செய்கின்ற குழந்தைகளுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தல், கடமைகளை புரிதல் மற்றும் இன்னோரன்ன அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தினை நன்றி பகரும் முகமாக இத்தினம் அனுஷ்ட்டிக்கப்படுகிறது.
உலக பெற்றோர் தின இந்தாண்டின் கருப்பொருள், விளையாட்டுத்தன பெற்றோரின் வாக்குறுதி என்பதாகும். ஜூன் முழுவதும் UNICEF எனப்படும் ஐநாவின் குழந்தைகள் நிதியம் பெற்றோர்களுக்கு ஆதரவு தருவது மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் அறிவியல் அடித்தளத்தை அமைக்கும், விளையாட்டுகளில் பங்கெடுக்கும் வகையில், செய்யப்படும். இதுதொடர்பாக ஆன்லைன் விளையாட்டுக்களும் வடிவமைக்கப்பட்டு, பெற்றோர்களும், குழந்தைகளும் விளையாடும் வகையில், அவர்களுக்கு பாதுகாப்பான சூழல் மற்றும் நேர்மறையான சூழலை உருவாக்குவதும் இதன் நோக்கம்.
“தாயில் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்று பாடியருளினார் ஒளவையார். அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம், மாதா பிதா குரு தெய்வம் என்று கூறும் அனைத்து நூல்களிலும் பெற்றோரின் மாண்பும் பெருமையும் வலியுறுத்தப்படுகின்றன.
இத்தகைய மாண்பு மிகு பெற்றோர்களினன் பிள்ளை என்ற வகையில் நானும் பெருமிதம் கொள்கிறேன். தந்தை நல்லையா பேரைப் போலவே நல் உள்ளம் கொண்டவர் . தாய் பூமணி பூவிலும் மென்மை படைத்த மேன்மையானவர். தந்தை ஏறத்தாழ தனது தந்தை இறந்த பிறகு தன் 16 வது வயதில் தொழிலுக்கு செல்லத் தொடங்கியவர் இன்று வரை தொழிலை செய்துகொண்டுதான் இருக்கிறார். எங்கள் நால்வரின் கல்விக்காக. எலும்புத் தேய பாடுபட்டவர். தந்தைக்கு இணையாய் என் அன்னையும் தேயிலைத் தோட்டத்தில் மழை வெயில் பாராது அரும் பாடுபட்டவர்.
இன்றைய காலத்தில் 1700 ரூபா சம்பளத்திற்காக நீதிமன்றம் செல்லும் கூட்டுக் கம்பனிகள் அன்று எம் பெற்றோருக்கு நாளாந்தம் 100-145 ரூபா சம்பளத்தையே வழங்கியிருந்தது. இதில் பேரு, கிலோ , நேரம் அது இதுனு சாட்டை சொல்லி உழைப்பை அட்டைக்கு இணையாய் உறிஞ்சி மேய்ந்தது முதலாளி வர்க்கம். எது எப்படியான போதும் எம் கல்விக்கு,உணவுக்கு எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை எனை பெற்றவர்கள். நேர்மை , திருடாமை, பொய் சொல்லாமை, திறமை, உழைப்பு,ஏமாற்றாமை, நேர முகாமைத்துவம் போன்ற அனைத்து சான்றாண்மை பண்புகளையும் எஎனக்கு கற்றுத் தந்தவர் எம் பெற்றோரே.
என் பெற்றோர் எத்தனையோ நபர்களின் வாழ்வுக்கு விடிவெள்ளியாய் அமைந்துள்ளனர்.எத்தனையோ பேர்களின் இல்லற வாழ்விற்கு ஏணிப்படியாய் அமைந்துள்ளனர். என் பெற்றோர்களை என் வாழ்வின் அச்சாணியாக எண்ணுகிறேன். அவர்களோடு இணைந்து வாழும் வேறின்றி அவர்களை என்றும் எப்போதுமே என் மானசீக குருவாக எண்ணுகிறேன். பெரும்பாலும் தம் பிள்ளைகளுக்கு மாத்திரமே பெற்றோர்களாக இருப்பார்கள். ஆனால் எனை ஈன்றவர்கள் அறிந்தவர்கள் யாவர்க்குமே நல் பெற்றோராகவே நடக்கின்றனர். இத்தகைய சிறப்பம்சம் நான் எந்தன்பெற்றோரிடத்தில் மாத்திரமே காண்கிறேன்.
நான் பெற்றோர் வழி கற்பினும் என் வழி வாழ்வு அமைத்தாலும் பெற்றோரின் ஆசி பெற்றவர்.அவர்கள் வழியில் என் குழந்தைக்கும் வழிகாட்டிட முயல்கிறேன்.
என் வாழ்வில் எப்படி ஒரு பெற்றோர் இருக்கக் கூடாது என்பதற்கு நிறையவே பெற்றோர்ளை சந்தித்துள்ளேன். அந்த வகையில் எனை பெற்றவர்கள் போலவே எனது தந்தையின் தங்கை (மாமி) தனது முயற்சியினால் தமது மூன்று பிள்ளைகளையும் கற்பித்து நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளார். தனது தேயிலைத் தோட்டத் தொழில் வருமானத்திலே தன் கணவன் பிள்ளைகள் மூவரையும் கவனித்து வந்தவர். தம் மூன்று பிள்ளைகளின் கல்விக்காய் என் தந்தையின் வழி பின்பற்றி உழைப்பால் தேய்ந்தவர். அவர்ள் மூவரும் நல்ல வழியில் பயணிக்க வழிகாட்டியுள்ளார்.
எனவே இத்தகைய தெய்வத்தின் மேன்மை கொண்ட. பெற்றோர்களை பெற்ற நாம் உண்மையிலே பேறுபெற்றவர்கள் தான்.
நாமும் எம் பிள்ளைச் செல்வங்களுக்கு இவர்களை உதாரணமாகக் கொண்டு வாழ்வோம்.